தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான நோயாளிகள் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிசெய்திட, அண்டை மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் பெறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி, பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கு ராம்கோ சிமெண்ட் நிறுவனம், மூன்று ஆக்சிஜன் செறிவூட்டிகளை இன்று (மே.25) வழங்கியது.
தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், தலா ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
ராம்கோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட இவற்றை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மருத்துவர்கள், ராம்கோ நிறுவன அலுவலர்கள், ரயில்வே அலுவலர்கள் உடனிருந்தனர்.