திருச்சி: தற்போதைய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ல் மார்ச் 29ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், திருவளர்ச்சோலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து, பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டபோதும் போலீசாரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டும் மேற்கொண்ட விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ராமஜெயத்தின் உறவினர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்க்குழுவினர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் அனுமதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று (நவ.14) திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு நடைபெற்ற விசாரணையில் சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா(எ)குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு தாங்கள் தயார் என ஒப்புக்கொண்டனர்.
அப்போது, தென்கோவன்(எ)சண்முகம் என்பவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த விசாரணையில் ஆஜராகாத மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேரையும் வரும் நவ.17ஆம் தேதி விசாரணையின்போது, நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்ட போலீசார், சிபிஐ, சிபிசிஐடி போலீசார் என விசாரணையை மேற்கொண்டும் முன்னேற்றம் ஏதுமில்லாததால், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக விசாரணைகளின் அடிப்படையில், 13 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, 13 பேருக்கு அனுப்பப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கான சம்மனில் ஆட்சேபனை ஏதும் இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று கடந்த 7ஆம் தேதி தங்களின் வழக்கறிஞர்களுடன் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், சில வழக்கறிஞர்களை மட்டும் அனுப்பியும் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, தள்ளிவைக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கும் வந்தது.
இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், ஆஜரான 9 பேரில் 8 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கிடையே தென்கோவன் என்ற ஒருவர் மட்டும் சம்மதம் இல்லை என நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் நினைவு தினம்: 2012ம் ஆண்டு நடந்தது என்ன?