திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் குமார் (35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் டிக்கெட் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. இவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆயுஷ் என்கின்ற மகன் உள்ளார். இவர் நள்ளிரவு (மார்ச் 6) ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சேது அதிவிரைவு ரயிலில் பணியில் ஈடுபட்டார்.
அந்த வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் ரயிலில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியை தொடங்கினார். இந்த ரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும், ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் அந்த பயணி தான் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் அந்த பயணி அரவிந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விருத்தாச்சலம் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை வாங்க மறுத்த விருத்தாச்சலம் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், திருச்சி ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இன்று (மார்ச் 6) காலை எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொது செயலாளர் வீரசேகரன் முன்னிலையில், திருச்சி ரயில்வே போலீசில் அந்த பயணி மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதன்பின் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் அரவிந்த் மீது தாக்குதல் நடத்திய பயணியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்குதல் நடத்தியாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் குமார், நான் கடந்த 8 வருடங்களாக டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறேன். இது போன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை. தற்போது என் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து அழைப்புகள் வந்தன" - சிராக் பாஸ்வான்!