சேலம் மாநகராட்சியில் பாவடி தெரு, குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேட்டூர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பட்டை கோவில் பகுதியில் சாலை நடுவே அமர்ந்து திடீரென சாலை மறியில் ஈடுபட்டனர்.
இதனால், அவ்வழியே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேட்டூர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறிய பொதுமக்கள், தங்களுடன் பாட்டிலில் எடுத்துவந்த மாசுபட்ட குடிநீரை மாநகராட்சி அலுவலர்களிடம் காண்பித்தனர்.
இதன்பிறகு, குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து இருக்கலாம் எனவும் உடனே எந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என கண்டறிந்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துக்கள், ஆட்டோக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.