திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி மலைப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் குறுக்கே பாதையை ஏற்படுத்தி அதன் வழியே இரவு நேரங்களில் கடந்த சில மாதங்களாக சிலர் அனுமதியின்றி செம்மண் எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மணப்பாறை வட்டாட்சியர் தமிழ் கனிக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டீஸ்வரன், பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அஜித் குமார் ஆகியோர் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை மடக்கியபோது அதிலிருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
அதன் பின்னர் புத்தாநத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லாரியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் உத்தரவை மீறி செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் டிப்பர் லாரியின் உரிமையாளராக தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் பிரமுகரின் பெயர் உள்ளதால் வருவாய் துறையினர் அதுகுறித்த தகவலைத் தர மறுத்துவிட்டதாக ஒரு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க... சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல் - பொதுமக்கள் புகார்