சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறையினர் மூலம் பாஜக பொய் வழக்குகளை பதிவு செய்துவருகிறது.
இதற்கு எனது தந்தையும், முன்னாள் அமைச்சர் சிவகுமாரும் முக்கிய உதாரணம். பாஜகவின் முக்கிய நோக்கம் எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாவிதத்திலும் கொச்சைப்படுத்துவதும், மக்களிடையே அவர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதும் மட்டுமே” என்றார்.
மேலும் பேசிய அவர், “பாஜகவிற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்கள் மீது வழக்கு பாயும். ஒருவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர் ஆகிவிடுவார்கள்” என்று விமர்சித்தார்.
இவர்களால் யாருக்கும் தண்டனை வழங்க முடியாது. விசாரணை என்ற பெயரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வழக்கு நிலுவையில் வைக்கலாம் எனக் கூறினார். சட்டத்தில் இருக்கும் ஓட்டையை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டு இவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை துன்புறுத்துகின்றனர் என்றார்.
இந்தியா வரும் சீன அதிபரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வரவேற்க தமிழ்நாடு அரசு பேனர் வைக்கலாம் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விசித்திரமாக உள்ளதென்றும், அரசியல் கட்சி பேனர் வைத்தால் விபத்து ஏற்படும், அரசாங்கம் பேனர் வைத்தால் விபத்து ஏற்படாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு பலமில்லை' - கார்த்தி சிதம்பரம் வாக்குமூலம்?!