திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் நேற்று இரவு அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்தத் தகராறின்போது விக்னேஷின் இருசக்கர வாகன சாவியை பறித்துக்கொண்ட அவர்கள், அதை இரவு வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி விக்னேஷை அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரவு பத்து மணியளவில் விக்னேஷை தொடர்புகொண்ட அவர்கள், ரயில் நிலையம் அருகே வந்து சாவியைப் பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.
அதை நம்பி ரயில் நிலையத்திற்குச் சென்ற விக்னேஷை திடீரென அடையாளம் தெரியாத நான்கு பேர் அரிவாள் கொண்டு ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷை மீட்ட அருகிலிருந்தவர்கள், உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் காவல் துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாக வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து