திருச்சி: மணப்பாறை அருகே தன் காதலனுடன் சேர்த்து வைக்கச் சொல்லி கர்ப்பிணிப் பெண் தன் காதலனின் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். 9 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவரது காதலர் வேறொரு திருமணம் செய்ய முயன்றதையறிந்த பின் காவல்துறையிடன் புகார் அளித்து அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தன் காதலனால் 9 மாத கர்ப்பிணியான இவர், இன்று (மே 7) தன் காதலர் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தினார். அவர், மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த சித்ரா(29) ஆவார். சித்ரா, மணப்பாறையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, இவருக்கு பொம்மன்பட்டியைச் சேர்ந்த அன்பரசன் (எ) ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 9 ஆண்டு காலமாக காதலித்தும் வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் காதல்முற்றி பல சமயம் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.
இதனால் சித்ரா கர்ப்பிணியாகியுள்ளார். இந்நிலையில், சித்ராவைத் தவிர்த்து விட்டு ரமேஷ் கடந்த ஆண்டு வேறொரு திருமணம் செய்ய முயன்றுள்ளார். அதனைக் காவல்துறையிடம் புகாரளித்து தடுத்து நிறுத்திய சித்ரா, இன்று ரமேஷ் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தலைமைக் காவலர் ராமு உள்ளிட்ட காவல்துறையினர் கர்ப்பிணி பெண் சித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.