திருச்சி: மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் செந்தில் கணேஷ், தேக்கமலை, தீனதயாளன் ஆகியோர் கூட்டாக இணைந்து 'செந்தில் கணேஷ் சிட்பண்ட்ஸ்' என்ற பெயரில் சீட்டு கம்பெனி ஆரம்பித்து நடத்தி வந்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சீட்டு நடத்திய பணத்தை எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த பணம் செலுத்தியவர்கள் சீட்டு கம்பெனி உரிமையாளர்களை கைது செய்து, பணத்தை மீட்டு தரக்கோரி வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் மீது ஓராண்டிற்கு மேலாகியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
![பொதுமக்கள் சாலை மறியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-salai-maroyal-issue-images-script-tn10020_06092021164505_0609f_1630926905_791.jpg)
30 நாட்களுக்குள் கைது
இதைக் கண்டித்து இன்று(செப்.6) வையம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
![பொதுமக்கள் சாலை மறியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-salai-maroyal-issue-images-script-tn10020_06092021164505_0609f_1630926905_483.jpg)
இதில் சமரசம் ஏற்படாததையடுத்து, மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜனனிபிரியா பொதுமக்களிடம் முப்பது நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து மோசடி செய்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரி பரிந்துரை