திருச்சி: திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக மாநகராட்சி பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டிய நிலையில், அவற்றை சரிவர மூடப்படாததால் சாலையில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் பகுதியில் இருந்து திருச்சி - தஞ்சை சாலையில் பிரிந்து வேங்கூர் வழியாக கல்லணைக்கு சாலை செல்கின்றது. இந்த சாலையின் இருபகுதியிலும் நிறைய குடியிருப்புகளும் கடைகளும் தற்போது அசுரவேகத்தில் வளர்ந்து வருகின்றன.
குறிப்பாக, இந்த சாலையில் வேங்கூர் பகுதியில் தான், பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. ஆகையால், இந்தப் பகுதிக்கு தினமும் சுமார் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நூற்றுக்கணக்கில் பேருந்துகள், வேன்கள், கார்கள் என வருகின்றன. இந்த நிலையில், சாலைகளில் பாதாள சாக்கடைப் பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் உள்ள நிலையில், இப்பணிகள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நீண்ட நாட்களாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையின் வழியாக செல்வதால் பலரும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக் கூறுகையில், 'திருவெறும்பூர் to கல்லணை ரோட்டில் இருந்து வேங்கூர் வரை செல்லும் சாலையின் அவலநிலையை சற்றும் கண்டுகொள்ளாத அரசும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் இது தொடர்பாக கேள்வி கேட்டால், ஒவ்வொரு அதிகாரியாக கையை காட்டி 2 ஆண்டுகளாக திசைதிருப்பி சாலையை சீரழித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் பள்ளி வாகனங்கள் மற்றும் அனைத்து ஊர்க்கார்களும், திருவெறும்பூர் சென்றடைய பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் பாதாள சாக்கடைகளுக்காக போட்ட துளையை சரியாக மூடாமல், 10 அடி குழியாக பெரிய அளவில் ஆழமாக உள்ளது. இதனைக் கடக்கும் பள்ளி வாகனங்கள், பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றால் கண்டிப்பாக உயிர் சேதம் நடக்கும். ஆகவே, முன்கூட்டியே இதைத் தவிர்க்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியை கண்டித்து விரைவில், அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆலோசனையைப் பெற்று அனைத்து பொதுமக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். இதற்காக, சாலையை தற்காலிகமாக சீரமைக்காமல் நிரந்தரத் தீர்வுடன் சாலையைப் புதுப்பிக்க வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!