திருச்சி: திருவெறும்பூர் அருகேவுள்ள கீழமுல்லக்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகனான அஜித் (23). உக்ரைன் நாட்டிலுள்ள டெர்னாபெல் ஹாஸ்டலில் தங்கி பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அஜித்தின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், “எனது மகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேசும்போது அங்குள்ள போர் நிலவரம், குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்துப் பேசினார். ஆனால், இன்று (பிப். 24) அவன் பேசுகையில் மிகுந்த பதற்றத்துடனேயே பேசினார். ஆங்காங்கே, குண்டு வெடித்து வருவதாகவும் ஹாஸ்டலை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விமான டிக்கெட் 60 ஆயிரம் ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும் எனத் தெரிவிக்கிறார்கள். போர் நடப்பதால் தற்போது விமானங்கள் இல்லை. உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகன், அவருடன் படிக்கக்கூடிய சக இந்திய மாணவர்களுடன் நாடு திரும்ப ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி வீடியோ வெளியீடு