திருச்சி சரகத்திற்குள்பட்ட ஐந்து மாவட்டங்களில் கடந்த 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 3,869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,036 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 3,498 இரு சக்கர வாகனங்கள், 83 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 1,653 வழக்குகளில் 2,138 பேர் கைது செய்யப்பட்டு, 1,715 இருசக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 666 வழக்குகளில் 1,180 பேர் கைது செய்யப்பட்டு, 598 இரு சக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனங்களும் மற்றும் 1 மூன்று சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 433 வழக்குகளில் 528 பேர் கைது செய்யப்பட்டு, 336 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 247 வழக்குகளில் 292 பேர் கைது செய்யப்பட்டு, 95 இரு சக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனமும் மற்றும் 1 மூன்று சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 870 வழக்குகளில் 898 பேர் கைது செய்யப்பட்டு, 754 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 49 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஐந்து மாவட்டத்தில் மொத்தம் 3,584 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டில் இருக்கும்போதும் அவசரத் தேவைக்காக வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பவர்களுக்கு காவல் துறையினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், நோயின் தீவிரம் தெரியாமல் சமூக பொறுப்பில்லாமல் இன்னும் சில பேர் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் பொய்காரணங்களைக் கூறி பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு தினம் தினம் வெளியில் செல்லாமல் நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.