திருச்சி மாவட்டம் கருமலை அடுத்த மாங்கனாப்பட்டியைச் சேர்ந்தவர் நைனான். விவசாய தொழில் செய்து வருகிறார். தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக துவரங்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில் நகைகளை அடகு வைத்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.
அப்போது, கருமலை என்ற இடத்தில் உள்ள சலூன் கடையில், முகச்சவரம் செய்தபின் வீட்டிற்கு சென்ற நைனான் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து புத்தாநத்தம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், கருமலை பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அதில், முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து இரண்டு இளைஞர்கள், பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துரையினர், பணத்தை கொள்ளையடித்த இளைஞர்களை தேடி வருகின்றனர். மேலும், பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகை: ஹைதராபாத்தில் 130 கிலோ எடைகொண்ட ஆடு குர்பானிக்காக பலி