தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி மாவட்ட விவசாயிகள் இன்று (ஜூலை27), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அலுவலர்களிடம் அய்யாக்கண்ணு வழங்கினார்.
அந்த மனு குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், '2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதில் இந்தியாவில் ஓபிசி பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு சம்மதம் தெரிவித்த அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பின்னர் கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் அதற்குரிய வாய்ப்பை சேர்க்காமல் ஏமாற்றிவிட்டார்.
தற்போது 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்தியாவில் ஓபிசி பிரிவினர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குறிப்பாக டெல்லியில் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் போன்ற பெரும்பாலான பதவிகளில் ஓபிசி பிரிவினர் யாரும் பணியாற்றவில்லை. மாறாக உயர் பிரிவு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
ஓபிசி பிரிவில் 95 விழுக்காட்டினர் விவசாயிகளாக உள்ளனர். அதனால் ஓபிசி பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தற்போது கரோனா காலத்தில் யாரையும் ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். விவசாயிகளுக்கான கடன்களை ரத்து செய்ய மறுக்கிறார்கள்.
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியிலும், தமிழ்நாடு முதலமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தில் இழப்பைச் சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி!