திருச்சி - புதுக்கோட்டை சாலையில் டிவிஎஸ் சுங்கச்சாவடி முதல் சேதுராம் பிள்ளை காலனி வரை இருபுறங்களிலும் வர்த்தக நிறுவனத்தினர் ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டி இருந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்தனர்.
இதையடுத்து அந்த சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான நோட்டீசை, வர்த்தக நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை வழங்கியது.
இந்நிலையில், இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வ கணேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வர்த்தக நிறுவன கட்டடங்களை இடித்து தரை மட்டமாக்கினர்.
குறிப்பாக ஒரு உணவகம், பள்ளிக் கட்டடம் உட்பட 43 வர்த்தக நிறுவன ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையுடன் காவல்துறையினர், வருவாய்த்துறை, போக்குவரத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் வாசிங்க : 'பேரறிவாளன் வேலூர் சிறைக்கு அழைத்து வரக் காரணம் என்ன?' - பரபரப்பு தகவல்கள்