அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனிடையே கடந்த 14ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெண்கள் உள்பட பலரும் காயமடைந்தனர். காவல் துறையின் தடியடியில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வலுக்கத் தொடங்கியது.
அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியிலுள்ள தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்றிரவு கூடிய மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தின்போது தமிழ்நாடு அரசு சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் எனவும் அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்'