திருச்சி: மத்திய கல்வி நிறுவனமான திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர்.
என்ஐடியில் மாணவர்களுக்கு பலனளிக்க கூடிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பயிற்சிகள், கருத்தரங்குகள், புதிய கற்றல் தேடல், மேம்படுத்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை செய்து வருகின்றன.
அந்த வகையில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதிநவீன ஆன்லைன் பட்டம் பெறுவதற்கான அம்சங்கள் உள்ளன.
தனித்துவமிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அதற்கான வகுப்புகள் 2024 கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும் என திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் இயக்குனர் அகிலா, மற்றும் இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் ப்ரோவோஸ்ட் கென்னத் டி. கிறிஸ்டென்சன் ஆகியோர் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இல்லினாய்ஸ் டெக்கின் பதிவு மேலாண்மை மற்றும் மாணவ விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மல்லிக் சுந்தரம், அமெரிக்க தூதரகத்தின், முதன்மை வணிக அதிகாரி கேரி அருண், மற்றும் கல்வியாளர்கள், என்.ஐ.டி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!