திருச்சி: லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அலுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அரவிந்தராஜ். இவர், தனது தாயார் சரஸ்வதியுடன் 35ஆண்டுகளாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். ஊராட்சித் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்த டீக்கடையினை இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்குச் சொந்தமான இரண்டே முக்கால் சென்ட் இடத்தில் வீடு கட்டத்திட்டமிட்ட அரவிந்தராஜ், அப்ரூவல் கேட்டு திமுக ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன், ஒன்றியத் தலைவர் ரஷ்யா ராஜேந்திரன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால், அவர்களிடம் பலமுறை மனுஅளித்தும் அரவிந்தராஜுக்கு அப்ரூவல் வழங்கவில்லை. இதனால், முன்விரோதம் காரணமாக தங்களது மனுவுக்கு அப்ரூவல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், தங்களுக்கு நியாயம் வழங்ககோரியும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அரவிந்தராஜ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, 'அப்ரூவல் வழங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும். மாவட்ட ஆட்சியர் வரை கட்டிங் கொடுக்க வேண்டும். அதனால் பணம் கொடுத்தால்தான் வீடுகட்ட அப்ரூவல் தர முடியும். இல்லாவிட்டால் இடத்தை விட்டுக்கொடுத்து விட்டுச்சென்றுவிடு. இல்லாவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர்’ எனக் கூறினார்.
இதுகுறித்து லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சௌந்தரபாண்டியனிடம் புகார் அளித்தபோது, 'இடத்தைக் கொடுத்துவிட்டு செத்துவிடு. இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம்' என மிரட்டுவதாகவும், அமைச்சர் கே.என்.நேருவிடம் முறையிட முயன்றும் தங்களை சந்திக்க நேரமில்லையென்று கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக திமுகவில் உறுப்பினராக இருந்துவரும் சரஸ்வதி, அரவிந்தராஜ் குடும்பத்தினரிடமே திமுகவினர் பணம்கேட்டு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் திமுகவினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி