திருச்சி: மலைக்கோட்டை அருகேவுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 29) நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசுப் போக்குவரத்து துறை கும்பக்கோனம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள்,
மேலும் போக்குவரத்து துறையில் பணியாற்றி இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கல் என மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.
தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “நாங்கள் எல்லாம் ஏசியில் செல்கிறோம் ஆனால் ஓட்டுநர், நடத்துநர்கள் அப்படி அல்ல மிக மிக கடினமாக சூழல்களை கடந்து அவர்கள் பணி செய்கிறார்கள். போக்குவரத்துத் துறைக்கு பிதா மகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். அவர் தான் இந்த துறைக்கு அடித்தளம். தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் அரசு பணியாளர்களாக உள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை உள்ள போக்குவரத்துக் கழகமாக நமது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் உள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய கோரிக்கையை முன் வைத்து அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்த துறைக்கு பல்வேறு சிறப்புகளை செய்தார்.
21 ஆயிரம் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏதேனும் குடும்ப பிரச்னை இருக்கலாம், ஏதோ ஒரு இடத்தில் கோபம் அடைந்து எதாவது செய்து செய்துவிட்டால், ஊடகங்களில் அந்த நாள் முழுவதும் அது சிறப்பு செய்தியாக மாறி விடுகிறது. எனவே ஊடக நண்பர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு துறைகளில் அதிகம் உடல் நலன் பாதிக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை தான் உள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “இன்று கும்பகோணம் கோட்டத்தில் தான் சிறப்பாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறுகிறோம். நாளை மதுரைக்கு சென்றால் மதுரை கோட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்போம். இதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது.
போக்குவரத்துத் துறை தான் ஓயாமல் உழைக்கிறது என்கிறீர்களே? நாங்கள் ஒரு நாள் சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் போக்குவரத்துத் துறை எண்ணாகும்” என கிண்டலாக பேசினார் கே.என். நேரு. தொடர்ந்து பேசிய அவர், “வருடத்திற்கு 5ஆயிரம் அரசுப் பேருந்துகள் நம் துறையின் கீழ் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது நாம் ஆட்சியில் இருந்த போது தான். கலைஞர் காலத்தில் தான் அதிகமான போக்குவரத்துத் துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
15 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வருடம் தோறும் ஊதிய உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் ஓய்வுதிய பலன் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்கள். இது மிக மிக வரவேற்கதக்கது. ஓய்வூதிய பலன்களை அப்போது எல்லாம் 5 வருடம் கூட கொடுக்க முடியாத நிலை எல்லாம் இருந்தது. ஆனால், தற்போது ஓய்வு பெற்று வீட்டிற்குச் செல்லும் போதே வாங்கி விட்டு செல்லலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘செந்தில் பாலாஜி வாங்கும் 10 ரூபாயில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு’ - சிவி சண்முகம்