திருச்சி: முசிறி தனியார் திருமண மண்டபத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு முசிறி வட்டத்தை சேர்ந்த 500 பயனாளிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டா மற்றும் தொட்டியம், காட்டுபுத்தூர், தா.பேட்டை பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு தலா ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளையும் சேர்த்து 1 கோடியே 82 லட்சம் மதிப்பிலான நல திட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முசிறி தொகுதியில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொட்டியம் தா.பேட்டை காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட் ஆகியவை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. வீடுயில்லாத அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திவருகிறார்.
முசிறியை நகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளோம். நகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பேசினார். இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முசிறி தொகுதி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் தொகுதி கதிரவன், முசிறி கோட்டாட்சியர் மாதவன் ,தாசில்தார் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டுமனைப்பட்டா கோரி 8 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அலையும் மாற்றுத்திறனாளி!