கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அம்புஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கயல்விழி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்துவந்தார்.
இதற்கிடையே இவருக்கும், மருத்துவர் சக்தி கணேசன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவர் சேலத்தில் மருத்துவராக உள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் கயல்விழி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.