புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் கூலி தொழிலாளி. இவரது மனைவியும், இரு மகன்களும் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். பின்னர் இவருக்கு மீண்டும் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவரோடு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் விஜயா மீண்டும் மூன்றாவதாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வையம்பட்டி அடுத்த அனுக்கானத்தம் ஊருக்கு விஜயா சென்றிருந்தபோது அங்கு அவரது அக்கா வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து திருச்சி மருத்துவமனையில் இந்த தம்பதியினருக்கு செவிலியர் ஒருவரும், மணப்பாறை அரசு மருத்துவமனையில் தரகராக பணியாற்றும் மேரி என்பவரும் குழந்தையை விற்க உதவியுள்ளனர்.
இதையடுத்து ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1.15 லட்சத்திற்கு வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோயில் முன்பு குழந்தை கை மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் விவரங்கள் முன்னுக்கு பின் முரணாக அளிக்கப்பட்டதையடுத்து 1098 சைல்டு லைன் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குழந்தை தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றது. மேலும் குழந்தையை விற்றவர்களிடம் மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள்