திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த மீனவேலி ஊராட்சி மன்றத் தலைவருடைய மகன் வினோத். இவர் தன்னுடைய நண்பர் சாமிதுரை என்பவருக்கு கடனாக அளித்திருந்த ரூ.5.50 லட்சத்தை திரும்பப் பெறுவதற்காக மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் சாமிதுரையை அழைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இன்று (பிப்.10) சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு சாமிதுரை வங்கிக்கணக்கில் இருந்த ஐந்தரை லட்சத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்ட வினோத், பணத்தை கையில் வைத்துக்கொண்டு வங்கியின் அருகில் இருந்த டீ கடையில் அவருடன் இணைந்து டீ அருந்தியுள்ளார்.
பின்னர் பணத்தை ஒரு பாலித்தீன் பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு அருகில் மதுரை சாலையில் உள்ள தனது மற்றொரு நண்பரின் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பணத்தை வைப்பதற்கு மற்றொரு துணிப்பையை பெற கடைக்குள் சென்றுள்ளார். இதனிடையே அவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வினோத்தின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து நடந்தவை குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சம்பவம் குறித்து கேட்டறிந்து, பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அளவில் அந்த விஷயத்துக்காக ட்ரெண்ட் ஆன சென்னை வி.ஆர்.மால்... பகீர் பின்னணி!