திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். கார் டிரைவராக பணிபுரியும் இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர் வீட்டின் அருகே உள்ள காலி மனையில் வீடு கட்ட அடித்தளம் போடுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் மழை காரணமாக நீர் நிரம்பியிருந்தது .
இந்நிலையில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சக்திவேலின் 5 வயது மகள் பாண்டிஸ்ரீ காலி மனை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மழைநீர் தேங்கியிருந்த அடித்தள குழிக்குள் விழுந்துள்ளார். வெகு நேரம் பாண்டிஸ்ரீ காணாததை அறிந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
பின்னர் நீர் நிரம்பிய குழிக்குள் பாண்டிஸ்ரீ கிடந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விமான நிலைய காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!