திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜான்சன் லிப்ட் நிறுவனம் சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணியை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் தொடங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் ஹை ரோடு வழியாக தில்லை நகரை சென்றடைந்தது.
இதில். ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, சாலை விதிகளை மீற மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், ஜான்சன் நிறுவன திருச்சி கிளை மேலாளர் கமலக்கண்ணன் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. லிப்ட் மூலமாக இந்த தொற்று பரவுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் இது பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. லிப்டுகளை சர்வீஸ் செய்யும்போது கிருமிநாசினி மூலம் அனைத்தையும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட முறையில் அனைவரும் கை கழுவுவதை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: 'கைகளில் சுத்தம் வேண்டும்' - இளைஞரின் கொரோனா விழிப்புணர்வு பரப்புரை