திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் வேல் அரவிந்த் கூறுகையில்,
ஆண்டுதோறும், மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் சிறுநீரகத் தொற்று ஆறாவது இடத்தில் உள்ளது. சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே தவிர்ப்பது குறித்த கருத்து தற்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சிறுநீரக பரிசோதனை என்பது வெறும் 300 ரூபாயில் செய்துவிட முடியும்.
சிறுநீரக பாதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். இந்த சூழ்நிலையில் சிறுநீரக தானம் செய்வோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி (Laparoscopy) மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் சிறுநீரக தானம் செய்வோர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வீடு திரும்பலாம்.
திருச்சியிலேயே முதன்முறையாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.