திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபய கோவிலாகவும் சமயபுரம் மாரியம்மனின் தங்கையுமான லால்குடி அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இக்கோயிலில் பங்குனி தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் பங்குனி தேர் திருவிழாவிற்காக கடந்த 2ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்ட விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு லால்குடி, அன்பில், நடராஜபுரம், கொப்பாவளி, அரியூர் செங்கரையூர், புள்ளம்பாடி, பெருவளநல்லூர், கான கிளியநல்லூர், பூவாளூர் புள்ளம்பாடி, தாளக்குடி, மேல வாளாடி, கீழ வாளாடி, மாந்துறை, டால்மியாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த தேர் திருவிழாவில் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் ஊழியர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். லால்குடி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உடனடியாக பிரிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் காரணங்கள்?