திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் செல்வதற்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி, புதிய விமான நிலையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது.
ஆனாலும் கூடுதல் செலவினமாக ரூ.249 கோடி என மொத்தம் ரூ.1200 கோடி மதிப்பிட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், புதிய விமான நிலையம் திறப்பு விழா காண உள்ளது. இந்த புதிய விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக, நேற்றைய முன்தினம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில், 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரே சமயத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகள் மற்றும் ஆயிரத்து 500 உள்நாட்டு பயணிகளைக் கையாள முடியும்.
இங்கு, புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மற்றும் ஆயிரம் கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் புதிய முனையத்தில் தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம், புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பயணிகள் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. இதேபோல, வருகை புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமான நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் வரும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதனை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி திருச்சி மாநகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளை 'தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்