திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் தேவாலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை மணப்பாறை வட்டாட்சியர் லஜபதிராஜ், மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.
போட்டியில் வென்றவர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் எல்.இ.டி. டிவி, தங்கக் காசு, வெள்ளிக் காசு, பட்டுப் புடவை பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் காயமடைந்த 18 வீரர்கள் உட்பட 24 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!