திருச்சி: மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் திருச்சி மாவட்டம், முக்கொம்பு புதிய கதவணையை மே 20 ஆம் தேதி மாலை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டங்கள் தொடர்பான செயல்கள் 12% மட்டுமே நடைபெற்று உள்ளதாகவும், இது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவு எனக் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தியா முழுவதும் குடிநீர் வழங்கும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் இன்னும் மூன்று மடங்கு அதிவேகமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இப்பணிகளை மிக வேகமாக செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார். தமிழ்நாடு பொறுத்த அளவு அனைவரும் தண்ணீர் சேமிப்பதை அவசியம் என உணர வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்கக்கூடாது. ஜல்ஜீவன் திட்டம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசுக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணை நிதி கிடைப்பதற்கு அதற்கான வேலைகள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறதோ அவ்வளவு விரைவாக அதற்கான நிதி தானாக மாநிலங்களுக்கு வந்துவிடும் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:ஜல் ஜீவன் திட்டம்: அசாமிற்கு 5601.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு