திருச்சி: ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், குமார் மற்றும் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்த பல்வேறு அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தின் நிறைவாக, செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேட்டியளித்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான சங்கர் கூறுகையில், சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவொரு கோரிக்கைகளைத் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிரச்சார இயக்கமும், நவம்பர் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் மாதம் 28ஆம் தேதி சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். தங்களின் கோரிக்கைகளான சம வேலைக்குச் சம ஊதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்டவற்றை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக சென்னையில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதன் பிறகு, போராட்டங்கள் வாப்பஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நடத்தவிருக்கும் தொடர் போராட்டங்கள் குறித்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவிரில் நீர் இல்லாமல் செயற்கை நீரூற்றில் நடந்த ஐப்பசி மாத துலா உற்சவம்!