திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் தலைவர் இஸ்லாமிய மக்களை அழைத்துக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து மனு அளிக்கச் சென்றார். அப்போது ராஜேந்திர பாலாஜி, உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்? நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடமாட்டீர்கள். அதேபோன்று கிறித்தவர்களும் வாக்களிக்கமாட்டார்கள்.உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப் போல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கண்டித்து இஸ்லாமிய மக்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் கண்டனங்களை தெரிவிப்பதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், செயலாளர் சையது ஜாகீர், பொருளாளர் உசேன், துணைத் தலைவர் உசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மதுல்லா, 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு வண்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டிய ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது தவறான நடைமுறையாகும்.
அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்வோம்' என்று தெரிவித்தார்.