திருச்சி: அதிமுக அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், '1972இல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா பொழிவோடு வழி நடத்திச்சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தினார். இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி மீட்டெடுத்தார்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டிப் பேசியது தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாக இருந்தது. தொகுதி பக்கம் செல்லாமல் அவரது மகன் ரவீந்திரநாத் தொகுதியின் வளர்ச்சிக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்றதாக கூறுவதை ஏற்க முடியாது. ஆகவே, திமுகவுடன் தந்தை மகனுக்கு மறைமுக உறவு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இந்த அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு இயக்கம் பிறக்க வாய்ப்பு இல்லை. அவர் விரைவில் பாஜகவுடன் சேர்ந்து விடுவார்.
திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே இருக்கிறது. திருச்சியில் 99.9% விழுக்காடு தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். டிடிவி தினகரன், சசிகலா சுற்றுப்பயணம் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. டிடிவி தினகரன் அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் பல்லி விழுந்த பழச்சாற்றை அருந்தியவர் மருத்துவமனையில் சிகிச்சை - கடையில் ரெய்டுவிட்ட அலுவலர்கள்