இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர் தடா ரஹீம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தடா ரஹீம் கூறியதாவது, 'மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான ஒரு சிந்தனையோடு பல சட்டங்களை இயற்றி வருகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக தமிழ்நாட்டில் தங்களது ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
'நீட்' என்ற ஒரு கொடுமையான தேர்வை அனுமதித்து இருப்பதால், அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தற்கொலை அல்ல. பாஜகவினால் ஏற்படுத்தப்பட்ட கொலை என்றுதான் கூற வேண்டும்.
இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பம் நிறுவப்படுகிறது. இதற்குப் பதிலடியாக சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜா உசேன், இளைஞரணி தலைவர் அல்லாஹ்சிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு - ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாணமாக சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்