திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சுக்காம்பட்டி அருகே உள்ள குருமலைக்களத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் விவசாய தொழில் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு இவருக்கு சொந்தமான 25 செம்மறி ஆடுகளை கிடையில் அடைத்து வைத்துள்ளார். அப்போது, இரவு சுமார் ஒரு மணியளவில் ஆட்டுக் கிடையில் திடீரென சத்தம் கேட்டதையடுத்து ஓடிச்சென்று பார்த்தபோது, சுமார் பத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கழுத்தில் மட்டும் காயம் ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
செம்மறி ஆடுகளை பரிசோதனைக்காக கால்நடை மருத்துவனைக்கு வடிவேல் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு எதனால் ஆடுகள் இறந்தது என்ற காரணம் தெரியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதேபோல் சுற்றுவட்டார கிராமங்களில் செம்மறி ஆடுகள் கழுத்தில் கடித்து ரத்தம் மட்டும் உறிஞ்சி எடுக்கப்பட்டதாக அவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே, வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மணப்பாறை வனத்துறை அலுவலர்கள் வராததால் இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.