ஈவெ.ரா மணியம்மையார் நூற்றாண்டு விழா திருச்சி சுந்தர் நகர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்வி வளாகத்தின் பணி தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். இவ்விழாவில் 'பெண் விடுதலை' எனும் நூல் வெளியிடப்பட்டது.
இதை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் பிரதியை முன்னாள் அமைச்சரும், திமுக திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு பெற்றுக் கொண்டு பேசுகையில், "மணியம்மையை பெரியார் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருவதற்கு மணியம்மைதான் காரணம்.
பெரியார் மீது கருணாநிதி அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். நேர்மை என்று பேசக்கூடியவர்களை இளைஞர்கள் நம்புகின்றனர். ஆனால் உண்மையிலேயே நேர்மை என்று பேசுபவர்களிடம் நேர்மை இருக்காது. அந்தளவுக்குப் பெரியார் மணியம்மை கட்டிக் காத்தார். திராவிட கட்சிகளுக்கு எதிரான மனப்பான்மை இளைஞர்கள் மத்தியில் இருப்பதைக் கண்டேன். ஆனால், தற்போது இந்த விழாவில் மாணவர்கள் திராவிட இயக்கங்கள் குறித்து பேசியது எனது எண்ணத்தை மாற்றி உள்ளது" என்றார்.
இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், "ஆண்களுக்கு சுதந்திரமும் மேன்மையும் அடைய வேண்டுமென்றால் பெண் விடுதலை முக்கியம் என்று உணர்த்தியவர் பெரியார்" எனத் தெரிவித்தார்.