ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது: இன்னொரு முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பது நடைபெறாது. இந்திய அரசியல் சட்டத்தின் மீது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது என கருத்து தெரிவித்தார்.
ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் அதை விட சிறப்பாக பணியாற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ‘தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது ஏமாற்று வேலை’ என்று சாடினார்.