திருச்சி மாவட்டம் தில்லைநகர் 7ஆவது கிராஸ் பகுதியிலுள்ள செங்குளத்தான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் தவசீலன் ( 27). இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள், தில்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தவசீலன் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ராஜேஸ்வரி வீட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று (ஜன.22) இரவு தனது இருசக்கர வாகனத்தை விற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தவசீலன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்ட அவர்களது வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில், இன்று (ஜன.23) அதிகாலை 3 மணிக்கு துணி துவைப்பதற்காக வெளியே வந்த சகுந்தலா தனது சகோதரியான ராஜேஸ்வரி வீட்டிலிருந்து பாட்டு சத்தம் அதிகளவில் கேட்டுள்ளதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளார்.
இதையடுத்து, அவரது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தை கண்டு அதிர்சியடைந்துள்ளார். மேலும், தாயின் உடல் அருகே பிள்ளைகள் இருவரும் அழுதபடி நின்று கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தில்லை நகர் காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான தவசீலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்து விவகாரம்: மனைவி, மகளைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்