கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நேற்று (செப். 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி உறையூர் அருகே சீராத்தோப்பில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று (அக். 1) அதிகாலை 3:30 மணி அளவில் சென்னையிலிருந்து அவரது உடல் திருச்சிக்கு எடுத்து வரப்பட்டது. அதன்படி காலை சுமார் 7 மணியளவில் திருச்சி சீராத்தோப்புக்கு கொண்டுவரப்பட்டது.
சீராத்தோப்பில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ராமகோபாலன் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பாஜக-வினர், இந்து முன்னணியினர், பொதுமக்கள் ராமகோபாலன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் சீராத்தோப்பு பள்ளி வளாகத்திலேயே ராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதால், உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!