திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) 15ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் விழாவை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தலைவர் சுப்ரா சுரேஷ் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், 'என்.ஐ.டி. பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. முதலாவது இடத்தை பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களில் 10ஆவது இடத்திலும் ஆர்கிடெக்சர் பிரிவில் ஏழாவது இடத்திலும், மேலாண்மை பிரிவில் 17ஆவது இடத்தையும் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு இஸ்ரோ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப மையம் ஆகியவற்றோடு திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம் செய்திருப்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்' என்றார்.
பட்டமளிப்பு விழாவில் பி.ஆர்க் 51, பி.டெக் 812, எம்.ஆர்க். 18, எம்.டெக் 468, எம்.எஸ்சி. 77, எம்.பி.ஏ. 85, எம்.எஸ். 23, முனைவர் பட்டம் 98 உள்பட மொத்தம் 1,721 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும், பி.டெக். 9, பி.ஆர்க். 1, எம்.டெக். 21, எம்.ஆர்க். 1, எம்.எஸ்சி. 4, எம்சிஏ. 1, எம்பிஏ. 1 ஆகிய பாடப்பிரிவு மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.