திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தை கருமலை அடுத்த அம்மாசமுத்திரம் புதூரைச் சேர்ந்த நல்லதம்பி என்ற நபர் ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து முத்தபுடையான்பட்டி பிரிவு சாலை வழியாக சத்திரப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையின் பக்கவாட்டில் இடப்பட்ட மண்ணில் பேருந்தின் முன்பக்க சக்கரம் இறங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் வலது புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்திற்குள் சிக்கிக் கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயத்தில் அலறியுள்ளனர். அப்போது அந்த அலறல் சத்தம் கேட்டு பதறிய அவ்வூர் பொதுமக்கள் ஓடி வந்து பேருந்திற்குள் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு 5க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்ட சீத்தப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தரமற்று அமைக்கப்பட்ட புதிய தார் சாலையின் ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் மறியலை கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரமற்ற சாலை அமைத்த சாலை ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறியதையடுத்து, பொதுமக்கள் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மறியல் நடந்த இடத்திற்கு வந்த டிஎஸ்பி ராமநாதனிடம் தங்கள் குறைகளை முறையிட்டனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்தை வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி பார்வையிட சென்ற நிலையில், மனக்குமுறல் அடங்காத பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கோபி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதால் காவல் துறையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு கொந்தளித்த அப்பகுதி பெண்கள் காவல் துறையினரிடம் தங்கள் குழந்தை இறந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்? யார் பொறுப்பேற்பது? இப்படி தரமற்ற சாலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள் எங்கே? அரசியல்வாதிகள் எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மீண்டும் கொந்தளிப்படைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நிலைமையை சாந்தமாக எடுத்துக் கூறி பொதுமக்களை சாந்தப்படுத்தினர். பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி அதனால் அரங்கேறிய அடுத்தடுத்து மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.