திருச்சி: கரூரில் இருந்து திருச்சிக்கு இன்று (நவம்பர் 15) பிற்பகல் அரசுப் பேருந்து வந்தது. பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ஓட்டுநர் சரவணன், நடத்துநர் இருவரும் டீ குடிக்கச் சென்றுவிட்டனர்.
அப்போது, இளைஞர் ஒருவர் பேருந்தை கடத்திச் சென்றார். இதைக்கண்டு பேருந்தின் நடத்துநரும், ஓட்டுநரும் கூச்சலிட்டனர். பேருந்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் முன்பே பேருந்து நிலையத்துக்கு வெளியே அந்த நபர் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.
பின்பு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பேருந்தை கடத்திச் சென்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடைய பெயர் அஜித் என்பதும் அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனால், அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்த முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பேருந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து முதலுதவிப் பெட்டியில் மது கடத்தல் - கைதான நடத்துநர்!