தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சாா்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய ஜெய்கணேஷ், 17 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்கள் கண்டுகொள்ளப்படவில்லை எனவும், ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி ஆய்வுமேற்கொண்டு பணியாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் காலி பெட்டிகள் இரண்டு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் நான்கு ரூபாய் கேட்கிறது. இதனால் பணியாளர் தனது கையிலிருந்து இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக மதுபான வகைகளுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய், 10 ரூபாய் என்று வசூல்செய்து அதில் கிடைக்கும், உபரி வருமானம் மூலம் அந்தத் தொகை செலுத்தப்படுவதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், இந்தக் கூடுதல் வசூல்செய்வது அரசுக்குத் தெளிவாகத் தெரியும். குவாட்டர் 60 ரூபாய்க்கு விற்றபோது எங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்துக் கொள்ள அரசே அனுமதித்ததாகவும், சம்பளம் கூடுதலாக இல்லாத காரணத்தால்தான் நாங்கள் மதுபான வகைகளுக்கு கூடுதல் கட்டணத்தை வசூல்செய்ய அரசு வழிவகுத்து கொடுக்கிறது என்றும், மதுபான வகைகளுக்கு கூடுதலாக வசூல்செய்ய அரசுதான் எங்களை ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காட்பாடியில் யானை கூட்டத்தை விரட்டும் முயற்சியில் வனத்துறை..!