திருச்சி: உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக இணையவழியில் நடந்த விநாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தமிழ்நாடு அரசால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக ஆன்லைன் மூலம் நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 11 ஆம் வகுப்பு படிக்கும் 67 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களுக்கு இன்று (நவ. 10) முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம்.
கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது. ஆனால் தொற்று பரவல் காரணமாக அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன். தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக முதலமைச்சர் தனியாக குழு அமைத்துள்ளார். EWS இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற வகையில் முதலமைச்சர் இருப்பார்" என்றார்.
இதையும் படிங்க: அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்க்க அரசு ஒப்புதல்