சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து விமானப் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருச்சி வந்தடைந்த விமானப் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அலுவலர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.
இதில் சிங்கப்பூரிலிருந்து வந்த கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற பயணி 520 கிராம் எடையுள்ள, ரூ.19.11 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததும், இதர 6 பயணிகளும் செயின் வடிவில் தங்களது உள்ளாடைகளிலும், டிக்கெட் பாக்கெட்டிலும், பால்பாயிண்ட் பேனா வடிவிலும், மின்னணு கருவி வடிவிலும் தங்கத்தின் நிறத்தை மாற்றி கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில், சென்னையைச் சேர்ந்த ரகுமான் என்ற பயணி 449 கிராம் எடையுள்ள ரூ.17.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும், அதே பகுதியைச் சேர்ந்த ஜாவித் என்பவர் 328 கிராம் எடையுள்ள 12.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதேபோல், சென்னையைச் சேர்ந்த முகமது ஹனிஃபா என்பவர் 241 கிராம் எடையுள்ள 9.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும், தென்காசியைச் சேர்ந்த முகமது ஷெரீஃப் என்பவர் 304 கிராம் எடையுள்ள 11.66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வந்தபோது பிடிப்பட்டனர். அவர்களின் பின்னால் வந்த சென்னையைச் சேர்ந்த ரகுமான் என்பவரும் 297 கிராம் எடையுள்ள 11.37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தபோது அலுவலர்களிடம் பிடிபட்டார்.
இதேபோல் சென்னையைச் சேர்ந்த முகமது ஹபீத் என்பவர் 304 கிராம் எடையுள்ள 11.64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளார். அவரிடமிருந்தும் அலுவலர்கள் தங்கத்தினை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 93 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.17 கிலோ எடையுள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட 7 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!