திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தேஜஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கர்நாடகா அரசு நமக்கு கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்காத நிலையில் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழக அரசு குறுவைக்கான காப்பீடு தொகை இன்னும் விடுவிக்கவில்லை. விவசாயிகள் காப்பீடு செய்ய வழிவகை செய்தல், உரிய இழப்பீடு வந்து இருக்கும். வரும் காலங்களில் விவசாயிகளுக்குப் பிரச்சனை அதிகமாகி வருகிறது.
காவிரி பிரச்சனை என்பது, பயிர் பிரச்சனை மட்டும் அல்ல தமிழக மக்களின் உயிர் பிரச்சனை. எனவே காலம் தாழ்த்தாமல், கெளரவம் பார்க்காமல் கர்நாடக முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். ஆனால் இன்னும், கர்நாடக முதலமைச்சரிடம் தமிழக முதலமைச்சர் தொலைப்பேசியில் கூட பேசவில்லை.
தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையில் சுணக்கம் காட்டுவதைப் பார்த்தால், ஏதோ உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே உடனடியாக காவிரி நீர் பிரச்சனையை நடுநிலையோடு தீர்க்கக்கூடிய செயல்பாட்டை அரசு கையாள வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு என்று பிரித்துப் பார்க்காமல் இந்தியா என்ற அடிப்படையில் அனைவரும் இந்திய விவசாயி என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்றார் போல செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக பெரும்பான்மையாக உள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பெரிய கட்சியாக அதிமுக இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் எதையும் நிறைவேற்றவே இல்லை.
அதிகப்படியான வரி சுமையை அரசு கொடுத்து உள்ளது இந்த நிலையில் வரும் தேர்தலில் மக்கள் நம்பிக்கை பெற்ற கட்சிகள் இதனால் ஆளுகின்ற கட்சிக்கு சவாலான தேர்தலாக அமையும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம். அந்த கூட்டணி நாட்டு நலன், மக்கள் நலன் ஆகியவற்றைச் சார்ந்து அமையும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Cauvery Water dispute: காவிரி விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? - விளாசும் நெட்டிசன்கள்!