திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் பவானி(35). இவருக்கும், கரூர் மாவட்டம் தோகைமலையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்பது வயதில் பெண் உள்ளது.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக கணவனை பிரிந்து மணப்பாறை ஆண்டவர் கோயில் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் பவானி வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி ஆயுதப் படையில் பவானி பணியாற்றிய போது, இரண்டு பெண் காவலர்களுக்கு வங்கியில் சில லட்சங்களை கடன் வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பெண் காவலர்களிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி அவ்வப்போது கேட்டு வந்த நிலையில், சக காவலர்கள் இருவரும் பணத்தை திருப்பி தர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இதனையடுத்து காவலர் பவானி, கடந்த 28ஆம் தேதி பணியிலிருந்த போது எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள், பவானியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூன் 29) அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி பவானி உயிரிழந்தார்.
சிகிச்சையின் போது பவானி அளித்த வாக்குமூலம் மற்றும் அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மணப்பாறை காவல்துறையினர், பணியில் இருக்கும்போதோ பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.