திருச்சி மாவட்டம், வீரப்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். அவரது 9 வயது மகள் கிருத்திகா. சிறுமியை நேற்று (மே.24) பிற்பகலிருந்து காணவில்லை என்று பெற்றோர் தேடிவந்த நிலையில், மாலையில் தலையில் பலத்த காயங்களுடன் அதே பகுதியிலுள்ள பூங்காட்டில் மயங்கிய நிலையில் பெற்றோரால் மீட்கப்பட்டார்.
உடனே சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக் விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமி மீட்கப்பட்ட இடத்தில், அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனின் உடைகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் சிறுமியின் தலையைத் தாக்குவதற்குப் பயன்படுத்திய கல்லை காவல்துறையினர் கண்டெடுத்தனர். தொடர்ந்து சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமி, இன்று(மே.25) காலை உயிரிழந்தார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், " சிறுவன் சிறுமியைக் கட்டிப் பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியைத் தலையில் கல்லால் பலமாகத் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சிறுமி உயிரிழக்கக் காரணமான சிறுவனை காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி உயிரிழப்பு! பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்?