திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் இன்றும் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற (1954ஆம் ஆண்டு) மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவரான டெல்லியைச் சேர்ந்த முன்னாள் முதுநிலை தணிக்கையாளரான ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கல்லூரியில் பயின்று சமுதாயத்தில் வெற்றியாளர்களாக சிறந்து விளங்கி வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த 21 முன்னாள் மாணவர்களுக்கு ஜமால் முகமது கல்லூரி சார்பில் சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பலரும் முன்னாள் மாணவர்கள் நல சங்கத்திற்கான நிதியை ஆர்வத்துடன் வழங்கினர். இறுதியாக முதுமை காலத்தில் தங்களது பழைய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பின்பு அனைவரும் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.