திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை அவரது உறவினரான இளைஞர் ரெங்கநாதன் (21) என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ரெங்கநாதன் தனது நண்பர்கள் மணி (எ) மணிகண்டன், தர்மா (எ) கணேஷ், சரண், தினேஷ் ஆகியோரை வரவழைத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர்.
பின்னர் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவதாகக்கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் சித்திரை மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதைக்கண்ட அவரது பெற்றோர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குழந்தை திருமணம் குறித்து தகவலறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவியது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காப்பகத்தில் இருந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளிர் காவல் துறையினர், சிறுமியை விசாரணைக்கு அழைத்து வந்து, நடந்த விவரங்களை கேட்டு புகார் மனு பெற்றனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரெங்கநாதன் மற்றும் மணிகண்டன், கணேஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சரண், தினேஷ் ஆகிய இருவரை தேடி வந்த நிலையில் சரண் மற்றும் தினேஷ் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை வழக்கு - அஃப்தாபுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!